கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித் ஷா சாலைப் பேரணி

"பாஜக அனைவருக்கும் மதிப்பளித்து ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டுள்ளது."
கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித் ஷா சாலைப் பேரணி
படம்: https://twitter.com/AmitShah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து சாலைப் பேரணி மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம சீனிவாசனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் இன்று பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து சாலைப் பேரணி மேற்கொண்டு பிரசாரம் செய்தார். இவருக்கு சாலையின் இருபுறமும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் மலர்தூவி அமித் ஷாவை வரவேற்றார்கள். மேட்டுக்கடை சந்திப்பில் தொடங்கிய சாலைப் பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

சாலைப் பேரணியின்போது அவர் பேசியதாவது:

"நரேந்திர மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராக்க வேண்டும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாட்டை மாற்ற உதவுங்கள். முன்னெப்போதும் இல்லாததைவிட, இவர் நாட்டை வளமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துள்ளார். தாமரைக்கு வாக்களியுங்கள், 400 இடங்களை வெல்ல உதவுங்கள்.

சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துகிறார்கள். மறுபுறம், பாஜக அனைவருக்கும் மதிப்பளித்து ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டுள்ளது.

திமுக, அதிமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் ஊழல் தமிழ்நாட்டின் நிலையையே சீரழித்துள்ளது. இந்த ஊழல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவும், முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தவும் பாஜகவைத் தேர்வு செய்யுங்கள்.

தமிழ் கலாசாரம், மொழி மற்றும் பெருமையை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் பிரதமர் மோடி அயராது உழைக்கிறார். வளர்ச்சி மற்றும் வளமான தமிழ்நாட்டை உருவாக்க பாஜகவுக்கு ஆதரவளியுங்கள்" என்றார் அமித் ஷா.

2020-ல் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் காலமானதைத் தொடர்ந்து, அவரது மகன் விஜய் வசந்த் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in