
திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் ஏதேதோ பேசுவதாகவும், கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசுவார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
திருநெல்வேலியில் இன்று (ஜூன் 27) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
`கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப்போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாகப் பேசுபவர்கள், முருகன் மாநாடு நடத்தினால் முருகன் எப்படி அவர்கள் பக்கம் போவார். உங்களுக்கே தெரியும், மதுரை முருகன் மாநாட்டில் 4 லட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்டார்கள்.
இது வாக்கு வங்கிக்காக நடத்தப்பட்டது என்று அவர்கள் கூறலாம். நான் கூறுவதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கிறிஸ்து சபை, காருண்யா சபை ஆகியவற்றைப்போல நாங்கள் முருகனுக்காக நடத்தினோம். யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை, பிற மதங்களையோ, பிறரைப் பற்றியோ புண்படுத்திப் பேசவில்லை.
அந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று யாரிடமும் நாங்கள் கேட்கவில்லை. குறிப்பாக, இந்து முன்னணி நடத்திய அந்த மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டோம். அதை தேர்தலுக்கான வாக்கு வங்கியாக மாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை. அவர்கள் முருகர் மாநாட்டை நடத்தினார்கள். நாங்கள் நடத்தியது முருக பக்தர்க்ளுக்கான மாநாடு.
தொடர்ந்து திமுக வெற்றிபெற்ற வரலாறு இல்லை. வரலாறு மாறப்போவதும் இல்லை. முதல்வர் ஸ்டாலினின் குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. அமித் ஷா கூட்டணி குறித்து அறிவித்த பிறகு, அவர்கள் பயத்தில் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். திமுகவுக்கு தேர்தல் பயம் தோல்வி பயம் வந்துவிட்டது.
கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசுவார்கள்’ என்றார்.