
கொள்கையில் உடன்பாடு இல்லாவிட்டால் ஏன் கூட்டணி வைக்கவேண்டும்? கூட்டணி என்பதே தற்கொலை செய்வதற்குச் சமம் என பேட்டியளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஊடகத்துக்கு சீமான் நேற்று (அக்.27) இரவு வழங்கிய பேட்டி பின்வருமாறு:
`திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களின் இரு கண்கள் என்று விஜய் கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. அது எங்களுக்கு உடன்பாடில்லாத முரண்பாடான கொள்கை. அது குழப்பமானது. ஒன்று சாம்பார் என்று சொல்ல வேண்டும் இல்லை கருவாட்டுக் குழம்பு என்று சொல்ல வேண்டும், கருவாட்டு சாம்பார் என்று சொல்லக்கூடாது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றாக இருக்க முடியாது. எங்களுக்கு இரு கண்களுமே தமிழ் தேசியம்தான்.
எங்களுக்கு உயிர் கொள்கையும் அதுதான். திராவிடத்துக்கும், இந்தியத்துக்கும் நேர் எதிரான கொள்கை கொண்டது தமிழ் தேசியம். தராசில் இந்த இரு தட்டுகளும் சமமாக இருக்க முடியாது. தமிழ் தேசியம் எங்கள் கண்கள், திராவிடம் எங்கள் புண்கள். அவை இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என நினைப்பவர்கள் அங்கே இணைந்து கொள்ளலாம்.
நாங்கள் தனித்து அதிகாரத்தைக் கைப்பற்றி எங்களுக்கு இருக்கும் கனவை செயல்படுத்துவோம். எவ்வாறு எங்கள் ஆட்சி இருக்கும் என்பதை அடுத்த தேர்தலுக்கு முன்பு படம் போட்டுக்காட்டுவேன். என் பயணம் என் கால்களை நம்பித்தான் இருக்கும். கொள்கையில் உடன்பாடு இல்லாவிட்டால் ஏன் கூட்டணி வைக்கவேண்டும்? கூட்டணி என்பதே ஒவ்வொரு கட்சியும் தற்கொலை செய்வதற்குச் சமம்.
அதற்கு விஷம் குடித்துவிட்டு படுத்துவிடலாம். கூட்டணியால் தனித்துவத்தை இழக்க நேரிடும். கூட்டணிக்குக் கட்சித் தலைவர் கோபித்துக்கொள்வாரோ என்று நினைத்து எதையும் பேச முடியாது. கூட்டணித் தலைவர்கள் செய்யும் தவறுகளுக்கு வக்காளத்து வாங்கி முட்டுக் கொடுக்க வேண்டும். கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என சிலர் கூறுகின்றனர்.
கட்சியைக் காப்பாற்றுவதுதான் லட்சியம் என்றால், பிறகு எந்த லட்சியத்தைக் காப்பாற்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என் முன்னோர்கள் செய்த தவறை நான் செய்யக்கூடாது என நினைக்கிறேன். தமிழ் தேசியம் பேசிய என் முன்னோர்கள் திராவிடத்தில் கரைந்துவிட்டனர். அவர்களை திராவிட பூதம் தின்று விழுங்கிவிட்டது. நான் திராவிடத்தை கொன்று புதைக்க வந்திருக்கிறேன்’ என்றார்.