
தவெக தலைமையில்தான் தேர்தல் கூட்டணி அமையும் என்று அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 4) நடைபெற்ற செயற்குழுவில் விஜய் பேசியதாவது,
`கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. மத்திய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக.
அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்குவேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ அல்லது தமிழகத்தின் மதிப்பிற்குறிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒரு போதும் வெற்றிபெற இயலாது.
சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடிக் குழைந்து கூட்டணி வைக்க நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக்கழகம் மிக உறுதியாக இருக்கிறது.
கூட்டணி என்றாலும், தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக, பாஜகவிற்கு எதிரானதாகவே இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நான் பரந்தூருக்குச் சென்று அவர்களை சந்தித்தபிறகு மக்கள் பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. பரந்தூர் பகுதி விவசாய பெங்குடி மக்களை முதல்வர் நேரில் சந்தித்துப் பேசவேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் அமையாது என்கிற உத்தரவாதத்தை வழங்கவேண்டும்.
இதில் எதையும் செய்யாமல், அனைத்தையும் கடந்துபோக நினைத்தால் பரந்தூர் பகுதி விவசாயிகளையும், பொது மக்களையும் நானே அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலை உருவாகும். அப்படி ஒரு சூழல் உருவாகாது என்று நம்புகிறேன். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டாலும், அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.