சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!

போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வலியுறுத்தினோம்.
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!
1 min read

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் முன்பு மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (அக்.26) சந்தித்து, திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், தொல். திருமாவளவன் ஆகியோர் பேசினர்.

இந்த சந்திப்பு நிறைவுபெற்றதும், அது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியவை பின்வருமாறு:

`சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்தது. போராட்டம் தீவிரமடைந்த சூழலில் சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தொழிலாளர்களை சந்தித்து எங்கள் ஆதரவை வழங்கினோம். இந்தப் போராட்டத்தை சுமூகமான முறையில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நோக்கில் நாங்கள் முதல்வரை சந்திப்போம் என வாக்குறுதி அளித்தோம்.

அப்போது முரசொலி செல்வம் காலமானதால் முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் அடிப்படையில் இன்று முதல்வரை சந்தித்தோம். சாம்சங் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வலியுறுத்தினோம். அனைத்தையும் கனிவுடன் கேட்டுக்கொண்ட முதல்வர், பரிசீலிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

அத்துடன் மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விசிக சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை மனு அளித்துள்ளார். சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையில் சுமூகமான தீர்வைக் காண முதல்வர் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு அவரிடம் நன்றியை தெரிவித்தோம்.

மேலும் சிறு, குறு தொழில்கள் நலிவடையக்கூடிய வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு தொழில்களின் முதலீட்டாளர்களும், தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர் என்பதையும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறோம்.

சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில் தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளர் நலத்துறை இருந்துவிடக்கூடாது என்பதை முதல்வரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in