
புதிய திரைப்படங்களை முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வரும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் ஒருவர் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களை, திரையரங்குகளில் வெளியாகும் முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்யும் தளம் தமிழ் ராக்கர்ஸ். இதனால், படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தார்கள்.
அண்மையில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் மலையாளத் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கொச்சி சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகாரளித்திருக்கிறார். இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்தத் தளத்தின் முக்கியமான அட்மினாக கூறப்படும் ஜெஃப் ஸ்டீபன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்தை படம்பிடித்துள்ளார். அப்போது கொச்சி சைபர் கிரைம் காவல் துறையினர் இவரைக் கைது செய்துள்ளார்கள். இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், படத்துக்கு ரூ. 5,000 கமிஷன் பெற்றுக்கொண்டு முதல் நாளில் படத்தைப் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றி வந்ததாகத் தெரிகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக இதே முறையில் புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.