அனைவரும் தேர்ச்சி நடைமுறை தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு!

இறுதித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும்.
அனைவரும் தேர்ச்சி நடைமுறை தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு!
1 min read

மத்திய அரசுப் பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்ததை அடுத்து, தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்ச்சி முறையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

கல்வி உரிமைச் சட்டத்தில் கடந்த 2019-ல் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலம் மத்திய அரசுப் பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், 5 மற்றும் 8-ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதனால் மத்திய அரசுப் பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.

எனினும், இறுதித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும் எனவும், ஒருவேளை அதிலும் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பில் மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புதிய மாற்றங்கள் குறித்து சம்மந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய மாற்றங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என்று தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

`தமிழகத்தில் தற்போது 8-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் கட்டாயத் தேர்ச்சி முறை மாற்றமில்லாமல் தொடரும். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தாது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பம் அடையத் தேவையில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in