அனைத்துக் கட்சிக் கூட்டம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தீர்மானம் நிறைவேற்றம் | SIR | All Party Meet |

"வாக்காளர் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை."
All-party meeting has passed a resolution to approach the Supreme Court against the Special Intensive Revision
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் படம்: https://x.com/mkstalin
2 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கு முன்னதாக இங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக கலந்தாலோசிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 60-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சுமார் 20 கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியானது. தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளன. பாமகவும் இதைப் புறக்கணிப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த தங்களுடைய பார்வையை முன்வைத்தார்கள். இறுதியாக, சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும். இல்லையெனில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தீர்மானம் முன்மொழியப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

பிஹாரில் கொண்டு வந்த சிறப்பு தீவிர திருத்தம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தைக் கொண்டு வந்ததை ஏற்க முடியாது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை! வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Summary

In a significant political move, an all-party meeting has passed a resolution to approach the Supreme Court challenging the Election Commission’s Special Intensive Revision of the voter list.

All Party Meet | DMK | Supreme Court | Special Intensive Revision | MK Stalin |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in