
அக்டோபர் 21, 22 அன்று தான் அதிகமாக மழை பெய்யும், புயல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை 14 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 58% அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான மாநில அவசரகால செயல்பாட்டு மையம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் உடனிருந்தார். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
"தேனி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் தான் மழை கொஞ்சம் அதிகளவில் பெய்துள்ளது. இங்கெல்லாம் எந்தவிதமான அபாயகரமான சூழல் எதுவும் இல்லை. எல்லாம் நல்லபடியாகச் சென்றுகொண்டிருக்கிறது.
அக்டோபர் 21, 22 அன்று தான் அதிகமாக மழை பெய்யும், புயல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தயாராக இருக்க வேண்டும் என எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
ஏறக்குறைய 2, 3 மாதங்களாகவே மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எந்தவிதமான பெரிய மழை வந்தாலும், அதைச் சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருவதால், பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "அதை எதிர்க்கட்சித் தலைவர் தான் தொடர்ந்து கூறி வருகிறார். அவர் கூறுவது தவறான செய்தி. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கிடங்குகளில் கொண்டு வந்து வைப்பதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். இன்னும் கொஞ்சம் இருக்கிறது. இரண்டு, மூன்று நாள்களில் அதையும் செய்து முடித்து விடுவோம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
MK Stalin | Chennai Rains | TN CM MK Stalin |