
மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் வரும் 23 அல்லது 24-ல் திறக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக அலங்காநல்லூர் கீழக்கரைப் பகுதியில் 16 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் ரூ. 44 கோடி செலவில் சுமார் 77 ஆயிரம் சதுர அடியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைப்பதற்கானப் பணிகள் கடந்தாண்டு முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 5 ஆயிரம் பேர் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காணும் வகையில் திட்டமிடப்பட்டது.
இதனிடையே, மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டார். இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கமானது வரும் 23 அல்லது 24-ல் திறக்கப்படும் என்று கூறினார்.