
காவல் மரண வழக்கில் உயிரிழந்த அஜித் குமார், தனிப்படை காவல்துறையினரால் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளானதால், ரத்தப்போக்கு ஏற்பட்டது மட்டுமல்லாமல் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கான வலுவான ஆதாரங்களை உடற்கூராய்வு அறிக்கை வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை நீண்டநேரம் நீடித்திருக்கலாம் என்றும், அவரது மரணத்திற்கு வழிவகுத்த சித்திரவதையுடன் அது ஒத்துப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதயம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளில் ரத்தக்கசிவுகள் இருப்பதும், உச்சந்தலைக்கு உள் பகுதியில் காயங்களும், ரத்தப்போக்கு இருப்பதும் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய காயங்கள் விபத்துகளின்போது காணப்படாது என்றும், மாறாக உடல் ரீதியான மேற்கொண்டப்படும் நீண்டநேர துன்புறுத்தலின் விளைவாகவே இவை ஏற்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அஜித்குமாரின் உடம்பில் 44 காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தசை அளவிலான ஆழமான காயங்கள், மூளை மற்றும் உள் உறுப்புகளில் ரத்தக்கசிவு ஆகியவற்றுடன் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளிப்புற காயங்கள் இருந்துள்ளன.
குச்சிகள், தடிகள் அல்லது கட்டைகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நீண்டநேர தாக்குதலால் இத்தகைய காயங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது
உச்சந்தலை, கை கால்கள் மற்றும் உள் உறுப்புகளில் ஆவணப்படுத்தப்பட்ட 44 தனித்தனி காயங்களைத் தவிர, அடர் சிவப்பு நிறத்திலான காயங்களும் அஜித் குமாரின் உடலில் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அஜித்குமாரின் உடம்பிலிருந்த காயங்கள் மேலோட்டமானவையாக இல்லை என்றும், குறைந்தது 30 இடங்களில் இருக்கும் காயங்கள் பலமான வகையில், மீண்டும் மீண்டும் அடித்ததைக் குறிப்பதாக இருக்கின்றன என்றும், அறிக்கையில் கூறப்படுகிறது.