
சென்னையில் விரைவில் அறிமுகமாகவுள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் ரயில், பெரம்பூர் ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இன்று (பிப்.12) பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்திய ரயில்வேவுக்குச் சொந்தமான சென்னை ஐ.சி.எஃப். ரயில்பெட்டி தொழிற்சாலையில் மின்சார ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகள் மற்றும் எல்எச்பி ரயில் பெட்டிகள் தயாராகி வருகின்றன. ஐ.சி.எஃப்.பில் தயாரிக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார புறநகர் ரயில்கள் மும்பையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடப்பு நிதியாண்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒரு மின்சார ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மின்சார ரயில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று (பிப்.12) காட்சிப்படுத்தப்பட்டது.
குளிர்சாதன வசதி, தானியங்கிக் கதவுகள், சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகளுடன் கூடிய 12 பெட்டிகளைக் கொண்ட இந்த மின்சார ரயிலில் 1,116 பேர் அமர்ந்த நிலையிலும், 3,796 பேர் நின்ற நிலையிலும் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் இந்த ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த ரயிலில் பயணிக்க, சாதாரண மின்சார ரயில்களைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்த ரயில் பொதுப் பயன்பாட்டிற்கு வரும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.