

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவு, எடப்பாடி பழனிசாமிக்கு முழு உரிமை, திமுகவுக்குக் கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தற்காலிக அவைத்தலைவர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமான தீர்மானங்கள்:-
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக- பாஜக-வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்த தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது.
கோவையிலும் மதுரையிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாததிமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்.
வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப் பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அதிமுக வரவேற்கிறது.
விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்கவும், நெல்லின் ஈரப் பதத்தை 17%-ல் இருந்து 22% ஆக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற்று, நெல் கொள்முதலை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்து, விவசாயிகளை திமுக அரசு காப்பாற்ற வேண்டும்.
தஞ்சை தரணிக்கு துரோகம் இழைத்து, `தானும் டெல்டாக்காரன்’ என்று தம்பட்டம் அடித்து, வேருக்கு வெந்நீரையும், விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து தந்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம்.
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள்! தமிழ்நாட்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் ஸ்டாலினுக்கு கண்டனம்.
தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும்! காவல் துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம்.
கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழ்நாட்டு மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக தோல்வியடைந்த மாடல் அரசுக்கு கண்டனம்.
தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற அரசுக்கு கடும் கண்டனம்.
2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக அரசுக்கு கண்டனம்.
எம்.ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் எடப்பாடி கே பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Important resolutions including support for the SIR, full rights to Edappadi Palaniswami, and condemnation of the DMK were passed at the AIADMK general committee and working committee meeting.