
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சென்னை கிண்டியில் இன்று மாலை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைவதை அமித் ஷா உறுதிபடுத்தினார். தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ 10 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது இது முதன்முறையல்ல.
1998 மக்களவைத் தேர்தல்
1998 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பாமக, மதிமுக, ஜனதா கட்சி, தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அதிமுக 18 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் என மொத்தம் 30 இடங்களில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், ஓராண்டிலேயே பாஜகவுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றார். பாஜக ஆட்சி கவிழ்ந்தது.
2004 மக்களவைத் தேர்தல்
2004 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் மீண்டும் அமைத்துப் போட்டியிட்டன. இதில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2004 தேர்தலுக்குப் பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கைய நாயுடு, "இது தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி. தற்போது தேர்தல் நிறைவடைந்துவிட்டது" என்றார்.
2019 மக்களவைத் தேர்தல்
2004-க்குப் பிறகு ஜெயலலிதா மறையும் வரை அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தேசிய அளவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தாலும், தமிழ்நாட்டில் தோல்வியைத் தழுவியது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனியிலிருந்து மக்களவைக்குத் தேர்வானார். பாஜகவால் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
2021 சட்டப்பேரவைத் தேர்தல்
2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணி நீடித்தது. இதில் திமுகவிடம் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது அதிமுக. அதிமுக சார்பில் 66 வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். பாஜக சார்பில் 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்.
முறிவும் இணைப்பும்
2023 செப்டம்பரில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி முறிந்தது. இரு வாரங்களுக்கு முன்பு தில்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். அப்போதே கூட்டணி இறுதியானதைப் புரிந்துகொள்ள முடிந்தது. சென்னை வந்த அமித் ஷா, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.