ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளுக்குப் பிறகே விபூதி வைக்கிறேன்: நீதிபதி சுப்பிரமணியன்

"ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்தவரை ஏற்புடையது அல்ல."
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளுக்குப் பிறகே விபூதி வைக்கிறேன்: நீதிபதி சுப்பிரமணியன்
1 min read

கல்வி நிறுவனங்களில் சாதிய மோதல்களைத் தடுப்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளுக்குப் பிறகே தான் விபூதி வைத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பள்ளி மாணவரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. இதற்காக கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன.

இந்தக் குழு கடந்த ஜூன் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து அறிக்கையைச் சமர்ப்பித்தது. அரசுப் பள்ளிகளில் உள்ள ஜாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும், பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கினால், நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது, தனியார் பள்ளிகளில் இடம்பெற்றுள்ள ஜாதி அடையாளங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும்போது, ஜாதி அடையாளங்கள் ஒருபோதும் இடம்பெறாது என உறுதியளித்த பிறகே அனுமதி வழங்க வேண்டும், குறிப்பிட்ட ஒரு சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில், சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படக் கூடாது என்பது போன்ற பல்வேறு பரிந்துரைகளை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் விசாரித்தார்கள்.

வழக்கு விசாரணையின்போது, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான டீன்களை நியமிப்பதற்கானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆன்லைன் ரம்மி, கல்வி நிறுவனங்களில் சாதிய மோதல்களைத் தடுப்பது போன்ற பிரச்னைகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படுவது குறித்தும் இதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது குறித்தும் நீதிபதி சுப்பிரமணியன் கேள்வியெழுப்பினார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையை ஏற்புடையதாக இல்லை எனக் குறிப்பிட்ட அவர், "பள்ளிகளில் சாதிய மோதல்களைத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்தவரை ஏற்புடையது அல்ல. சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கைக்குப் பிறகே நான் விபூதி இட்டு வருகிறேன்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in