.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
வாசனைத் திரவிய பாட்டில் உடைந்த விவகாரத்தில் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரைக் கண்டித்து பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 9-ல் வாசனைத் திரவிய பாட்டில் ஒன்று உடைந்து அதனால் 14 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதைத் தொடந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று (ஆகஸ்ட் 12) காலை, தென்காசி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் செல்லக்கூடிய சாலையை மறித்து தொடர்ந்து 2 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வாசனைத் திரவிய பாட்டில் உடைந்த விவகாரத்தைத் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர் மாணவிகளை குற்றம்சாட்டினார்.
இந்த காலதாமதத்தினால் மாணவிகள் பாதிக்கப்பட்டனர். எனவே தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் மாணவிகள். இதை அடுத்து காவல்துறையினர் வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
பிறகு போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா. கோட்டாட்சியரிடம் பள்ளியில் உள்ள கழிவறைகளின் அவலநிலை, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதம் ஆகியவை குறித்து புகார் அளித்தார்கள் மாணவிகள்.
மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடந்திய கோட்டாட்சியர், தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர் பள்ளி மாணவிகள்.