
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் குறித்து இன்று (டிச.4) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான அரையாண்டு தேர்வுகள் வரும் டிசம்பர் 9-ல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தன. இதற்கிடையே ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால், தமிழகத்தின் பல வட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின.
இதைத் தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பலரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து நேற்று (டிச.3) சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறையின் உயரதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் காணொளி வாயிலான ஆலோசனை மேற்கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ். இந்தக் கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் சீரமைப்புப் பணிகளை வேகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிச.4) செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியவை பின்வருமாறு, `மாவட்ட வாரியாக மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் குறித்த பட்டியலைக் கேட்டுள்ளோம். திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 9-ல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும். ஆனால் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் இருக்கும் பள்ளிகளில் ஜனவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படும்’ என்றார்.