
உதவித் தொகையை உயர்த்தி வழங்குமாறு இன்று (அக்.23) காலை சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம் நடத்திய நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் விசிக எம்.பி. து. ரவிக்குமார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சர் வீரேந்திர குமாருக்கு எம்.பி. ரவிக்குமார் எழுதிய கடிதம் பின்வருமாறு:
`2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகையான 121 கோடியில், 2.68 கோடி பேர் `மாற்றுத் திறனாளிகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 2.21% ஆகும். அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர்.
1. ஆந்திர பிரதேச மாநில அரசால் வழங்கப்படுவதுபோல் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை பகுதியளவு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 6,000 ஆகவும், முழு அளவு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 15,000 ஆகவும் உயர்த்த வேண்டும்.
2. உதவித்தொகைக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
3. வயது வித்தியாசமின்றி, தகுதியுள்ள அனைத்து நபர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை வழங்கிட வேண்டும்.
4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்) கீழ் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும்.
5. டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அந்த்யோதயா அன்ன யோஜனா (A.A.Y.) குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை இந்திய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கிவரும் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்குமாறு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் இன்று (அக்.23) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.
இதில், 75 சதவீதத்துக்கும் மேல் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் ரூ. 2,000 உதவித் தொகையை, ரூ. 10,000 ஆகவும், 75 சதவீதத்துக்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் ரூ. 1,500 உதவித் தொகையை, ரூ. 6,000 ஆகவும் உயர்த்தி வழங்கவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கையை முன்வைத்தனர்.