உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம், அரசு வேலை: இ.பி.எஸ் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விற்பனை பெருமளவு நடைபெறுகிறது. இதற்குப் பின்னால் ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருக்கின்றனர்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம், அரசு வேலை: இ.பி.எஸ் கோரிக்கை
ANI
1 min read

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி.அதில் அவர் பேசியது பின்வருமாறு:

`கள்ளச்சாராயத்தைப் பருகி 36 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனையான மற்றும் வருத்தத்துக்குரிய விஷயம். நகரப்பகுதியில் அதுவும் காவல் நிலையத்துக்கு அருகிலேயே கள்ளச்சாரயம் விற்கப்பட்டது என்றால் இந்த ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்’.

`இதற்குப் பின்னால் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனால்தான் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்குக் காரணம்’.

`சென்னையிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து எங்குமே இல்லை. ஏழை எளிய மக்களின் அப்பாவி உயிர்கள் இந்த சம்பவத்தால் பறிபோயுள்ளது’.

`கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விற்பனை பெருமளவு நடைபெறுகிறது. இதற்குப் பின்னால் ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருக்கின்றனர். திமுக கட்சி முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த சம்பவத்துக்குக் காரணமான நிர்வாகத்திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்’.

`பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும், பெற்றோர்களை இழந்துவாடும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 5,000 வழங்கப்படும். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம், அரசு வேலை தர வேண்டும்’.

இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு கருணாபுரம் பகுதியில் ஆய்வுக்குச் சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in