சட்டப்பேரவையிலிருந்து இரண்டாவது நாளாக அதிமுக வெளிநடப்பு

அதிமுக உறுப்பினர்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் குறித்து விவாதிக்கக் கோரி முழக்கமிட்ட அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அவையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்றாவது நாளாக இன்று காலை கூடியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் சம்பவத்தைக் கண்டித்து சட்டப்பேரவைக்கு நேற்று கருப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள், இரண்டாவது நாளாக இன்றும் கருப்புச் சட்டை அணிந்து வந்தார்கள்.

இன்றும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தார்கள். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, "பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உங்களுக்குத் தேவையான நேரத்தை நான் வழங்குவேன், உங்களுடையக் கருத்துகளை நீங்கள் தாராளமாக இந்த அவையில் பதிவு செய்யலாம்" என்றார். மேலும், "நீங்கள் நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளீர்கள். உங்களுக்கு அவை நடவடிக்கைகள் அனைத்தும் தெரியும். நினைத்த நேரத்தில் நினைத்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கான நேரம் இதுவல்ல" என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கமளித்தார்.

சட்டப்பேரவையில் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

அதிமுக உறுப்பினர்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார். மேலும், அதிமுக உறுப்பினர்கள் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாகவும், வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் அவர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in