
ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதாக தவெக மதுரை மாநாட்டில் விஜய் குற்றம்சாட்டிய நிலையில், ஆர்.எஸ்.எஸ். கருத்துகளை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஆக. 27) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட பிறகு, மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், `அதிமுக ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இருப்பதாக விஜய் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல அதிமுக வாக்குகள் தன் பக்கம் வருவதற்கான பேச்சை அந்த (மதுரை) மாநாட்டில் பார்க்க முடிந்தது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து எல். முருகன் பேசியதாவது,
`ஆர்.எஸ்.எஸ். என்பது மிகப்பெரிய இயக்கம். தொடர்ந்து நூற்றாண்டுகள் கடந்து இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய சமூக சேவைக்கான இயக்கம். அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சிறப்புகள் குறித்து பண்டித ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முகாமில் நேரடியாகக் கலந்துகொண்டு அம்பேத்கர் புகழ்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு சமூக மாற்றத்திற்கான இயக்கம். வெள்ள பாதிப்பாகட்டும், கொரோனா நேரமாகட்டும் முன்களப் பணியாளர்களாக நின்று பணி செய்வது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தன்னார்வலர்கள்.
அப்படிப்பட்ட இயக்கத்தின் கருத்துகளை ஒருவர் கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துகளை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது. நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் சேவைக்கான ஒரு அமைப்பு (அதிமுகவை) வழிநடத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து கற்றுக்கொண்டு அதன்பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சனம் செய்யட்டும்’ என்றார்.