நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் புறக்கணிப்பு: அதிமுக

நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும்.
நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் புறக்கணிப்பு: அதிமுக
1 min read

நீட் தேர்வு தொடர்பாக, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்ததை அடுத்து, அது தொடர்பாக அடுத்த கட்டமாக எடுக்கவேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9 அன்று நடைபெறும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 8) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

` 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது, நீட் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்திருந்தும், ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் அதை மறைத்து, வாக்குகள் பெறுவதற்காக பொய்யாக தேர்தல் பரப்புரை செய்தார்கள். திமுகவின் இரட்டை வேடத்தால் 4.4.2025 வரை, நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் இதுவரை சுமார் 20 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு, திமுக முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும்.

குடியரசுத் தலைவர் நீட் தொடர்பான தமிழ்நாட்டின் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிலைமை இவ்வாறு இருக்க, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இதில் என்ன முடிவு எடுக்க முடியும்?

2026-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை இரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in