நிர்வாகத் திறனற்ற முதல்வரால் 58 பேர் உயிரிழப்பு: ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு

இந்த விடியா அரசு பொறுப்பேற்ற பிறகுதான் கடந்த மூன்று வருடங்களில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது அதிமுக.

இதில் கள்ளக்குறிச்சி நகரத்தில் நடந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி. அவரது உரை பின்வருமாறு:

`இந்த துயரமான நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிர்ந்துபோய் உள்ளது. இந்தக் கோர நிகழ்வுக்கு விடியா திமுக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். இந்த விடியா அரசு பொறுப்பேற்ற பிறகுதான் கடந்த மூன்று வருடங்களில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள், கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது’

`போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கள்ளச்சாராய விற்பனை தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் முதலமைச்சர் கவலைப்படவில்லை. கள்ளக்குறிச்சி மையப்பகுதியில், காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும், ஆட்சியர் அலுவலகத்துக்கும் அருகில் தங்குதடையில்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்றால் இந்த ஆட்சி எப்படி இருக்கிறதென்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்’

`ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு திமுகவைச் சேர்ந்த இந்தப் பகுதியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளின் துணையோடுதான் இந்தக் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றதாக கள்ளக்குறிச்சி மக்கள் என்னிடம் தெரிவித்தார்கள். ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களைத் துச்சமாக நடத்துகிறது இந்த அரசாங்கம். நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் இந்த மாநிலத்தை ஆளுவதால் கள்ளக்குறிச்சி நகரத்தில் சுமார் 58 பேர் மரணமடைந்துள்ளனர்’

`காவல் துறை மற்றும் அரசு நியமித்துள்ள ஆணையத்தால் (மக்கள்) நீதி கிடைக்காது. இதில் சம்மந்தப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் அதிகாரம் மிக்க புள்ளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர சிபிஐ விசாரணை வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்’

`மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அதிமுக. மக்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அதைத் தட்டிக்கேட்கும் இயக்கம் அதிமுக. அதற்காக எத்தனைத் தியாகங்கள் வேண்டுமானாலும் அதிமுக செய்யும். அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in