
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான வா. மைத்ரேயன் இன்று (ஆக. 13) திமுகவில் இணைந்தார்.
புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு பாஜகவில் உறுப்பினரானார். மாநில அளவில் பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் 1999-ல் பாஜகவில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார்.
ஜி.கே. மூப்பனார் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட காலியிடத்திற்கு அதிமுக சார்பில் 2002-ல் மாநிலங்களவை எம்.பி.யாக முதல்முறையாக மைத்ரேயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 2007 முதல் 2019 வரை இரண்டு முறை மாநிலங்களவை எம்.பி.யாக அவர் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, திறம்பட பணியாற்றினார்.
தில்லி அதிமுக முகமாக அறியப்பட்ட மைத்ரேயன், மாநிலங்களவை அதிமுக தலைவராகவும் செயல்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அதிமுகவில் இருந்து 2022-ல் நீக்கப்பட்டார். அதன்பிறகு 2023-ல் தாய்க்கழகமான பாஜகவில் அவர் இணைந்தார்.
சில காலம் பாஜகவில் செயல்பட்ட பிறகு 2024-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்து அதன் அமைப்புச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியால் மைத்ரேயன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து இன்று (ஆக. 13) திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.