
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜன.11) நடைபெற்றது. இதைத் கூட்டத்தைத் தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
`சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், பிப்ரவரி 5-ல் நடைபெறவுள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது.
மறைந்த மு. கருணாநிதி காலந்தொட்டு, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'அராஜகம், வன்முறை என்றாலே திமுக - திமுக என்றாலே அராஜகம், வன்முறை' என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக் காலங்களில், திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.
கடந்த முறை நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைத் தாண்டி திமுகவின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தது.
திமுகவினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை அமர்ந்திருக்கவில்லை என்றால் முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படாது என்கிற மிரட்டலை முன்வைத்து, சொந்த மண்ணில் மக்கள் அகதிகளைப்போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள்.
மேலும், பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களைச் சுதந்திரமாக வாக்களிக்கவிடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, அதிமுக புறக்கணிக்கிறது’ என்றார்.