சட்டப்பேரவையிலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்

முதல்வர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் பேரவை விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.
சட்டப்பேரவையிலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி சட்டப்பேரவைத் தலைவர் இருக்கை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணியளவில் கூடியது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்தார்கள்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கப்படுவதற்கு முன்பு விஷச் சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக, பாமக உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கோரிக்கை எழுப்பினார்கள். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை எழுப்பினார்கள்.

சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக இருக்கக்கூடிய அவை முன்னவரான துரைமுருகன் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என்றார். இருந்தபோதிலும், அதிமுக உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பினார்கள்.

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டார்கள். சட்டப்பேரவைத் தலைவர் கேள்வி நேரம் முடிந்தபிறகு விவாதிக்கலாம் என்று கூறிய பிறகும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டார்கள். பேரவைத் தலைவர் இருக்கை முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபடத் தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவின் பெயரில் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சிகளும் பங்கேற்று தங்களுடையக் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதிகொண்டவன் இந்த முதல்வர். சட்டப்பேரவைத் தலைவர் பல கோரிக்கைகள் வைத்தும், பேரவை முன்னவருக்கும் பேச வாய்ப்பு கொடுக்காமலும் இருந்ததை முதல்வராகவும், அமைச்சர்களாக இருந்தவர்களும் தவிர்த்திருக்க வேண்டியது.

இன்று காலை மற்றும் மாலை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள், கேள்வி நேரம் முடிந்தபிறகு அனுமதிக்கப்படலாம் எனும் வேண்டுகோளை ஏற்றும், பிரதான எதிர்க்கட்சி தனது கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதைப் பரிசீலித்து சட்டப்பேரவைத் தலைவர் தேவையானதை செய்ய வேண்டும்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று வெளியேற்றப்பட்டவர்களின் தண்டனை ரத்து செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in