நடப்பு கூட்டத்தொடரிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்: அப்பாவு உத்தரவு

அதிமுக உறுப்பினர்கள் வீண் விளம்பரத்தில் ஈடுபடுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குக் கூடியது. அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். இதுதொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை அவை நடவடிக்கைகளில் பங்கெடுக்கவில்லை. நேற்றும் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக உறுப்பினர்கள் நேற்று ஒரு நாள் முழுக்க அவை நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வழக்கம்போல் தொடங்கியது. அதிமுக உறுப்பினர்கள் இன்றும் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தார்கள். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால், அவை நடவடிக்கை தொடங்குவதற்குக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்பு கேள்வி நேரம் ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறி, கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட, அவர்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்ற சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

மேலும், அதிமுக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதிலுமிருந்து இடைநீக்கம் செய்யப்படுவது தொடர்பாக அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதிமுக உறுப்பினர்கள் வீண் விளம்பரத்தில் ஈடுபடுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in