
அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்" என்று இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் கொடியசைத்துத் தொடக்கிவைத்துள்ளார். இதன் காரணமாக கட்சிப் பொறுப்புகளிலிருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.