பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை: இபிஎஸ்

"இதைப் பாருங்கள். இதுதான் கள்ளக் கூட்டணி. கள்ளக் கூட்டணிக்கு இதுதான் சாட்சி."
பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை: இபிஎஸ்

அதிமுகவுக்கு பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி தந்தார். காஞ்சிபுரம் தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் நேற்று வைத்த விமர்சனத்துக்கும் எடப்பாடி பழனிசாமி பதில் விமர்சனம் வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளது என ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நாங்கள் எங்கு கள்ளக் கூட்டணி வைத்துள்ளோம்? அவர்களுக்குதான் அதற்கான பழக்கம் உள்ளது. நாங்கள் கள்ளக் கூட்டணி வைக்கவில்லை. இதுவரை எந்தத் தலைவரும் இப்படி சொன்னது கிடையாது.

கள்ளக் கூட்டணி வைத்தது யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்தான் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். இவரும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். என்ன ஓர் அற்புதமான படம் இவை(பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் இருக்கும் புகைப்படங்களை எடப்பாடி பழனிசாமி உயர்த்திக் காண்பித்தார்).

பிரதமர் நரேந்திர மோடி 2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அப்போது சிரித்துக்கொண்டிருந்ததைக் கொச்சைப்படுத்திய உதயநிதி ஸ்டாலின், பல்லைக் காண்பித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

நீ எதைக் காட்டிக்கொண்டிருக்கிறாய்? நீ (பல்லை) காட்டினால் சரி, நான் (பல்லை) காட்டினால் தவறா? சிரிப்பது தவறா? (பிரதமர் நரேந்திர மோடியுடன் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை உயர்த்திக் காட்டி பேசினார் எடப்பாடி பழனிசாமி)

ஸ்டாலினுக்கு சிரிப்பே வராது. அவர் சிரித்து என்றைக்காவது பார்த்துள்ளீர்களா? ஆனால், இதைப் பாருங்கள். இதுதான் கள்ளக் கூட்டணி. கள்ளக் கூட்டணிக்கு இதுதான் சாட்சி.

அதிமுக எப்போதும் யாருக்கும் மறைமுக ஆதரவைக் கொடுக்காது. நாங்கள் நினைத்திருந்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். ஆனால், எங்களுக்கு அவசியம் இல்லை. உங்களைப்போல பதவி வெறி பிடித்த கட்சி அல்ல அதிமுக" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in