
பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் வந்ததால், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சம்மந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனரை எச்சரிக்கும் தொனியில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
`மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு புதிய பேருந்து அருகே உள்ள வேலூர்-ஆலங்காயம் சாலையில் கூடியிருந்த மக்களிடையே அவர் பரப்புரையை மேற்கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்திற்கு உள்ளே ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் எரிச்சலடைந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
`வண்டியின் எண்ணை குறித்து வைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளியுங்கள். வேண்டுமென்றே கூட்டத்திற்குள் கலாட்டா செய்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் எனது பொதுக்கூட்டத்திற்கு ஆம்புலன்ஸை அனுப்புகிறார்கள். கேவலமாக இல்லையா இந்த அரசுக்கு?
இதுபோல ஆயிரம் ஆம்புலன்ஸை விட்டாலும் மக்களின் மனதை மாற்ற முடியாது. ஒவ்வொரு முறையும் ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் வருகிறது.. வண்டியின் எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வேண்டுமென்றே கூட்டத்திற்கு கலாட்டா செய்கிறீர்கள்.
ஒவ்வொரு முறையும் நான் பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஆம்புலன்ஸை விடுகிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு இது கேவலமாக இல்லை? வண்டி எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 கூட்டங்களில் இதை பார்த்து வருகிறேன். இதேபோல ஆம்புலன்ஸை கூட்டத்திற்கு அனுப்புகிறார்கள். ஆக, இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த முறை ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் நோயாளியை ஏற்றிச்செல்வது போலத்தான் இருக்கும்.
வெறும் வண்டியாக ஆம்புலன்ஸ் வந்தால், அதை யார் ஓட்டிக்கொண்டு வருகிறாரோ அவர் நோயாளியாக மாறி மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலைமை வரும்’ என்றார்.