ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பேரணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பேரணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசியது சர்ச்சைக்குள்ளானது.
"இப்படியொரு பிரதமரைப் பெற்றதற்கு இந்திய மக்கள் உண்மையில் பெருமைப்பட வேண்டும். நாம் பெருமைப்படுகிறோம். ராணுவ வீரர்கள் என்ன போரில் எல்லைக்குச் சென்று சண்டை போட்டார்களா?
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிட்டது. இந்தக் கருவிகளை எல்லாம் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசு. வாங்கிக் கொடுத்தவர் பாரதப் பிரதமர். கேட்டவர் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவர்கள் தான் எந்தெந்த ஆயுதங்களை வாங்க வேண்டும், எதிரிகளை எப்படி தாக்கலாம் என இவர்கள் தான் உன்னிப்பாகச் செயல்பட்டார்கள்.
எனவே, முதலில் பாராட்ட வேண்டியது பாரதப் பிரதமரை. அதை விட்டுவிட்டு ராணுவ வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கிறது திமுக. என்ன நாடகம் ஆடுகிறார்கள் பாருங்கள்" என்று செல்லூர் ராஜு பேசியிருந்தது சர்ச்சையானது.
செல்லூர் ராஜுவின் இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
"இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன். அவர்களின் தியாகத்தை வணங்குபவன். என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம், அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க. தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள்.
நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன். ஆனாலும், இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்குமேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய குடும்பம் முன்னால், இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!!" என்று செல்லூர் ராஜு பதிவிட்டுள்ளார்.
செல்லூர் ராஜுவின் கருத்து தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அண்மையில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு, செல்லூர் ராஜுவை கோமாளி என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.