டிடிவி தினகரனைச் சந்திக்கவில்லை: கே.ஏ. செங்கோட்டையன் மறுப்பு | KA Sengottaiyan | TTV Dhinakaran |

முன்பு, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதால் செங்கோட்டையனின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தான் சந்திக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஊடகங்களில் திரும்பத் திரும்ப தெளிவுபடுத்தி வருகிறார்.

இதற்கிடையே, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் வைத்து அவரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருந்தால், நான் அந்தக் கூட்டணியில் தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதை எழுத்து மூலமாகக் கொடுத்திருக்கிறேன். நண்பர் அண்ணாமலை என்னைச் சந்தித்து என் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொன்னார். நான் கூட்டணியில் இருந்து வெளியேறிய காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் காரணத்தை மீறி நான் மீண்டும் இணைய முடியாது" என்றார்.

மேலும், "நண்பர் அண்ணாமலை வந்தபோது, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அரசியலைத் தாண்டி நாங்கள் நண்பர்கள். அவர் என்னைச் சந்திக்க வந்து, இதுதான் கேட்பார் என்று எனக்கும் தெரியும். அதனால், அதை நாங்கள் பேசிவிட்டோம்.

சில தலைவர்களை என்னைச் சந்திக்க வைத்து, என்னைச் சமரசம் செய்யலாம் என்று சிலர் முயற்சி செய்தார்கள். அவர்களது முயற்சியை நான் தவறாகச் சொல்லவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை. ஆனால், துரோகியை என்றைக்கும் நண்பராக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் டிடிவி தினகரன்.

இதைத் தொடர்ந்து தான் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் வைத்து செங்கோட்டையன் சந்தித்ததாகத் தகவல் வெளியானது. இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசியதாக சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் கூறப்பட்டன.

ஆனால், டிடிவி தினகரனை தான் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாகப் பேசிய செங்கோட்டையன், தனிப்பட்ட காரணத்துக்காக சென்னை வந்ததாகவும் யாரையும் பார்க்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.

முன்பு, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமைக்குக் கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. இந்நிலையில் தான், டிடிவி தினகரனை தான் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார்.

KA Sengottaiyan | TTV Dhinakaran | AIADMK | ADMK | AMMK |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in