
அதிமுக முன்னாள் அமைச்சர் கோவையிலிருந்து விமானம் மூலம் தில்லி சென்றடைந்துள்ளார்.
தில்லி செல்லும் முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ஹரித்வாருக்குச் செல்லவுள்ளதாகக் கூறினார்.
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் செப்டம்பர் 5 அன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மனம் திறந்தார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்தார். இதற்கான முயற்சிகளை 10 நாள்களுக்குள் எடுக்காவிட்டால், இதே மனநிலையில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் செங்கோட்டையன் எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து, அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து பேசிய செங்கோட்டையன், தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறினார். இதன் காரணமாக, செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் செய்திகளில் கவனம் பெற்றன.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை கோவையிலிருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டார் செங்கோட்டையன். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஹரித்வார் சென்று ராமரைத் தரிசிக்கவுள்ளதாகக் கூறினார்.
"ராமரை வணங்குவதற்காக ஹரித்வார் செல்கிறேன். நான் இதுவரைக்கும் யாரையும் சந்திக்கவில்லை. யாரிடமும் பேசவில்லை. என் கருத்தை நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உள்பட பலரும் வரவேற்றுள்ளார்கள்" என்றார்.
பிற்பகலில் தில்லி சென்றடைந்த செங்கோட்டையன், தில்லி விமான நிலையத்திலும் செய்தியாளர்களைச் சந்தித்தார். "ஹரித்வார் செல்கிறேன். இது ஆன்மிகப் பயணம். ஹரித்வார் சென்று சாமியைத் தரிசனம் செய்து வரவுள்ளேன்" என்று பதிலளித்துக் கடந்துவிட்டார்.
பாஜக மூத்த தலைவர்களை தில்லியில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையன் அதுகுறித்து எதையும் தெரிவிக்காமல் மறுத்து வருகிறார்.
KA Sengottaiyan | AIADMK | ADMK | Delhi Visit |Delhi |