வி.கே. பாண்டியனுக்கு ஆதரவாக அதிமுக: பாஜகவைக் கண்டித்து ஜெயக்குமார் பதிவு

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பாஜகவைக் கண்டித்து ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தலில் வளர்ச்சித் திட்டங்கள் தலைவரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான வி.கே. பாண்டியனைக் குறிவைத்தே பாஜக தங்களுடையத் தேர்தல் பிரசார உத்திகளை வகுத்தது. நவீன் பட்நாயக் உடல்நிலை குன்றி இருப்பதாகவும், வி.கே. பாண்டியன் கட்டுப்பாட்டிலேயே ஒடிஷா இருப்பதாகவும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்கள் விமர்சித்து வந்தார்கள். ஒடிஷாவைத் தமிழன் ஆளலாமா என்ற முழக்கங்களையெல்லாம் எழுப்பினார்கள்.

இது அரசியல் விளம்பரங்கள் வரை நீண்டுள்ளது. வி.கே. பாண்டியனைக் கேலி செய்யும் வகையில், தமிழர் மரபு மற்றும் ஒடிஷா மரபைப் பின்பற்றக்கூடிய இருவரை ஒப்பிட்டு உணவு முறையை கிண்டலுக்குள்ளாக்கி பாஜக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

வி.கே. பாண்டியன் என்கிற தனி மனிதர் மீதான பாஜகவின் விமர்சனங்கள், ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. இது பாஜகவின் சர்ச்சைக்குரிய விளம்பரத்துக்கும் எழுந்தது.

பாஜகவின் இந்த விளம்பரத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பாஜகவைக் கண்டித்து ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.

"தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்! அறிந்தவர்கள்!

ஒரு தமிழன்‌ ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.

வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.

உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்! என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?

கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.

ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது.

மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்!" என்று ஜெயக்குமார் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in