
அம்மா என்பது உலகம் முழுக்க இருப்பது என்று அம்மா திட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"அம்மா என்பது உலகம் முழுக்க இருப்பது. அம்மா என்பது தனிப்பட்ட பெயரா? அம்மா திட்டம் என்பதற்கு விளக்கமே கொடுத்துள்ளோம். திட்டத்தின் பலன்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதன் விரிவாக்கம் தான் அம்மா என்று வரும்.
ஸ்டாலின் நலன் காக்கும் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் என்று பெயர் வைக்க உங்களுடைய அப்பா வீட்டு பணமா? கருணாநிதி சம்பாதித்து வைத்ததை எடுத்துக் கொடுக்கலாம். எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது.
கருணாநிதியின் தந்தை முத்துவேல் இருக்கிறார் இல்லையா? அவர் ஆரம்பக் காலத்தில் டாடா பிர்லா குடும்பத்தின் உறவினர். அவருடைய பணத்திலிருந்து எடுத்துக்கொடுக்கலாம். எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது.
அப்பா சம்பாதித்த பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கலாம். அதற்கு ஸ்டாலின் பெயரை வைக்கலாம், உதயநிதி பெயரை வைக்கலாம், இன்பநிதி பெயரை வைக்கலாம். எல்லோருடைய பெயரை வைத்தாலும் எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது.
ஆனால், மக்களுடைய வரிப் பணத்தில் உங்களுடைய பெயரை வைக்க என்ன தார்மிக உரிமை உள்ளது? அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இப்படி பெயர் வைக்க எவ்விதத் தார்மிக உரிமையும் கிடையாது" என்றார் ஜெயக்குமார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள திட்டங்களில் முதல்வர் உள்பட வாழும் நபர்களின் பெயர்கள் இடம்பெறக்கூடாது என்றும், அரசுத் திட்ட விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் பெயர்களையோ, புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 1 அன்று உத்தரவிட்டது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
Jayakumar | ADMK | MK Stalin | Madras High Court | DMK | C.ve. Shanmugam | D jayakumar