ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரிக்கும், அவரது கணவர் பாபுவுக்கும் 2021-ல் விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனை இன்று (செப்.05) உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 1991-ல் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அன்றைய வேலூர் மாவட்டத்தின் நாட்ராம்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகத் தேர்வானார் இந்திரா குமாரி. இதைத் தொடர்ந்து அப்போது அமைந்த ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று ஐந்தாண்டு காலம் பதவியில் இருந்தார் இந்திரா குமாரி. அப்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம் உருவானதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
இதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக, இந்திரா குமாரி மற்றும் அவரது கணவர் பாபு ஆகியோர் மீது 1996-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு 2006-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து அக்கட்சியின் இலக்கிய அணித் தலைவராகப் பதவி வகித்தார்.
1996-ல் இந்திரா குமாரிக்கும், அவரது கணவர் பாபுவுக்கும் எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 29 செப்டம்பர் 2021-ல் வெளியானது. இந்தத் தீர்ப்பை வழங்கிய எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்திரா குமாரிக்கும், அவரது கணவர் பாபுவுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் இந்திரா குமாரி.
மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருந்தபோது கடந்த 15 ஏப்ரல் 2024-ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் இந்திரா குமாரி. இந்நிலையில் இந்திரா குமாரிக்கும், அவரது கணவர் பாபுவுக்கும் முன்பு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.