வரவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான எங்களுடையக் கூட்டணி தொடரும் என தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து அவர் விளக்கமளித்ததாவது:
"2024 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு, 5.3 சதவீதம் வாக்குகள் வாங்கியுள்ளோம். தேமுதிகவைப் பொறுத்தவரை இது வளர்ச்சிதான். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிடும்.
டிசம்பர், ஜனவரியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. முதலில் இந்தத் தேர்தலை முடிப்போம். இதன்பிறகு, 2026 சட்டப்பேரவைத் தேர்தல். இதற்கு தேமுதிக தயாராக உள்ளது. எங்களுடையக் கூட்டணி பலமாக உள்ளது. கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி 2026-ல் மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக வருவார். இந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார் சுதீஷ்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக முதன்முறையாக எதிர்கண்ட தேர்தல் களம் நாடாளுமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது.