
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முதலில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் திருவேங்கடம் என்பவர் புழல் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோர் கடந்த 17 அன்று செம்பியம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த அருள் என்பவரது வங்கிக் கணக்குக்கு மலர்கொடி மற்றும் ஹரிஹரன் ரூ. 50 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்ததாகத் தகவல் வெளியானது. இவர்களுடைய கைது நடவடிக்கையின்போது அஞ்சலை என்பவர் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது. இவரும் காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடைசியாகக் கைது செய்யப்பட்டவர்களில் மலர்கொடி அதிமுகவின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளராக இருந்துள்ளார். ஹரிஹரன் என்பவர் தமிழ் மாநில காங்கிரஸின் மாநில மாணவரணி துணைத் தலைவராக இருந்து, அந்தப் பொறுப்பிலிருந்து மட்டும் நீக்கப்பட்டவர். அஞ்சலை என்பவர் வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்தவர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இவர்கள் அனைவரும் அவரவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்கள். சதீஷ் என்பவர் திமுக நிர்வாகியின் மகன்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஹரிதரன் என்பவர் இன்று 16-வது நபராகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டின் அதிமுக கவுன்சிலர். இவருடையக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, ஹரிதரனும் தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.