கல்வி நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்ட ஒப்புதல் வாரியம், 2024-2025 நிதியாண்டுக்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ. 3,586 கோடி நிதியை ஒதுக்க ஒப்புதல் அளித்தது. இந்த நிதியை 4 தவணைகளில் தமிழக அரசுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, முதல் தவணை நிதியான ரூ. 573 கோடி, கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் இருந்து இந்த நிதி விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கல்விக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
'ஒரே வார்த்தையில் அழைத்தோம் - மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன் ? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய அமைச்சர்களை வருந்தி அழைத்து, பாஜகவுடன் சமரசம் செய்துகொண்ட ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுகவும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பாஜகவும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.