திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்: அதிமுக அறிவிப்பு

வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்தியதைக் கண்டித்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி..
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அக்டோபர் 9 அன்று மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும்;

இளைஞர்கள், பெண்கள் நலனை முன்னிறுத்தி அதிமுக ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம், மாணவர்களுக்கு மடிக் கணினி உள்ளிட்ட ஜெயலலிதா அரசில் செயல்படுத்தப்பட்ட பல முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிறுத்தியதைக் கண்டித்தும்;

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும்;

ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழில் முதலீடுகள் குறித்தும்; அது தொடர்பான முழு விவரங்கள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும்; வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும்;

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்க்கேட்டைக் கண்டித்தும்; அதிகரித்து வரும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் ஏற்படும் சமூக விரோத குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தவறிய ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக புரட்சித் தலைவி பேரவை சார்பில் மதுரையில் அக்டோர் 10 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர், எம்ஜிஆர் திடலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இதற்குத் தலைமை வகிக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in