
தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நகை திருட்டுப் புகாரின்பேரில் கடந்த ஜூன் 28 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த காவல் மரண வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் மாரீஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் இன்று (ஜூலை 22) நடைபெற்ற விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்டபிறகு, சட்டவிரோத காவல் மரணத்தால் உயிரிழப்பவரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவுறுத்தலை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.
இதைத் தொடர்ந்து, `பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் வழங்கவேண்டும். மேலும், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-க்கு ஒத்தி வைத்தனர்.