லாபம் ஈட்டுவதற்காக அதானி குழுமம் குறி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் இவருடையக் கணவர் பங்குகளை வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டி ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு செபி தலைவர் மாதபி புச் மறுப்பு தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து, அதானி குழுமமும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை இதுதொடர்பாக பேசினார்.
"ஹிண்டர்பர்க் இதற்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். இதை உச்ச நீதிமன்றத்தின் சிறப்புக் குழு விசாரித்தது. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று சிறப்புக் குழு கூறியது. சொல்லப்போனால், அவமதிப்பு என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஹிண்டன்பர்க் என்பது ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட் (Short Selling Agent). இதுபோன்ற ஒரு செய்தியைக் கூற வேண்டும். இதன்மூலம், முதலீட்டாளர்கள் அச்சமடைய வேண்டும். பங்குகளை விற்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு செயல்படுவதால் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் லாபம் கிடைக்கிறது.
இது பொதுச்சேவை நிறுவனமோ, ஊடகமோ கிடையாது. லாபம் ஈட்டும் நிறுவனம் தான் ஹிண்டன்பர்க்.
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டியது நம் கடமைதான். இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை நாம் ஆராயக் கூடாதுதான். செபியின் தலைவருக்கு வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களில் பங்கு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்கள். இதை நிச்சயமாகக் கண்டறிய வேண்டும்தான்.
ஆனால் இதற்கு முன்னதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. முன்பு, அதானி என்று வந்தார்கள், தற்போது செபி என்று வந்துள்ளார்கள். புலி வருது, புலி வருது என்று ஹிண்டன்பர்க் அறிக்கை வருகிறது, கழுதைப் புலிகூட வரவில்லை.
இந்தியா முழுக்க உள்ள நிறுவனங்களைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான கோடிகளில் லாபம் ஈட்டுவது ஹிண்டன்பர்க் செயல்பாடு. இந்தியாவில் அதானியைக் குறைவைப்பார்கள். ஐரோப்பாவில் வேறு ஒரு நிறுவனத்தைக் குறிவைப்பார்கள்.
இதுவரை அவர்கள் கூறியது பொய்யாக இருந்தாலும், அரசு இதை விசாரிக்கும்" என்றார் அண்ணாமலை.
மேலும், "வலிமையான இந்தியா என்பது உலக நாடுகளுக்கு ஓர் அச்சுறுத்தல். எனவே, வரும் காலங்களிலும் இந்தியா மீது இதுபோன்ற தாக்குதல்கள் நிகழலாம்" என்றார் அவர்.