தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்.
கடந்த நவ.3-ல் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நந்த கோபால் அளித்த புகாரின் பேரில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த நவ.16-ல் ஹைதராபாதில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நவ.17-ல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கஸ்தூரியிடம் இருந்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து வாக்குமூலம் பெறப்பட்டது. அதன்பிறகு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் கஸ்தூரி. விசாரணையின் முடிவில் நவம்பர் 29 வரை கஸ்தூரிக்கு நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி ரகுபதி. இதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு சிறப்பு குழந்தை இருப்பதால் அவரைப் பார்த்துக்கொள்ள ஜாமின் கோரி கடந்த நவ.18-ல் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனு மீதான விசாரணை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் இன்று (நவ.20) விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்காததால், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி தயாளன்.