
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.
முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசினார் நடிகை கஸ்தூரி என சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து தன் பேச்சுக்கு அறிக்கை வாயிலாக வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி. ஆனால் இந்த விவகாரத்தை முன்வைத்து கஸ்தூரி மீது 7 பிரிவுகளின் கீழ் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவானார் நடிகை கஸ்தூரி. மேலும் மதுரையில் பதிவான இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அவர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வுக்கு முன்பு கடந்த நவ.12-ல் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், `பொது இடத்தில் ஒரு சமூகத்தை அவதூறாகப் பேசிவிட்டு, பின்னர் வருத்தம் தெரிவித்தால் அந்த சமூகத்துக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முடியாது. எனவே மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது’ என வாதிட்டார்.
இந்த விசாரணையில் காணொளி வழியாக ஆஜராகி தன் விளக்கத்தை அளித்தார் கஸ்தூரி. மேலும் கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராமின் வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நவ.14-ல் தீர்ப்பு வழங்குவதாக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இன்று (நவ.14) காலை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனால் விரைவில் கஸ்தூரி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.