பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி, தடா பெரியசாமி உள்ளிட்டோருக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை கௌதமி கடந்த 1997-ல் பாஜக மூத்த தலைவர் அத்வானி முன்பு அக்கட்சியில் இணைந்தார். 25 வருடங்களாக பாஜகவின் உறுப்பினராக இருந்த கௌதமி, கடந்த 23 அக்டோபர் 2023-ல் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார்.
தன்னுடைய சொத்துக்களை அழகப்பன் என்ற நபர் அபகரித்தாகவும், இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவில் இருந்து தனக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கௌதமி. இதனை அடுத்து கடந்த 14 பிப்ரவரி 2024-ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு அக்கட்சியில் இணைந்தார் கௌதமி.
இந்நிலையில் கௌதமியை அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமித்து இன்று (அக்.31) அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அத்துடன் முன்பு பாஜகவின் பட்டியல் அணி மாநில தலைவர் பதவியில் இருந்த தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி, 18-வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு கடந்த 30 மார்ச் 2024-ல் அதிமுகவில் இணைந்தார். தற்போது தடா பெரியசாமியை அக்கட்சியின் அமைப்பான அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் மாநில துணைச் செயலாளராக நியமித்துள்ளார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.