விஜய்
விஜய் ANI

எனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்: தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

“கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்க வேண்டும்”.
Published on

தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். சுரேஷின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்களில் பலர் பாக்கெட் விஷச்சாராயம் குடித்து, அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 49 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று விஜய் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார்.

நாளை விஜய் தனது 50-வது வயதில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த அறிக்கையை புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார். எனவே, அவரின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in