தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வருகிற ஜூன் 18 அன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி வாரியான நிர்வாகிகளின் கூட்டம் வரும் ஜூன் 18 அன்று சென்னையில் உள்ள பனையூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் உலக பட்டினி தினத்தையொட்டி, சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த புஸ்ஸி ஆனந்த், “விஜய்யின் பிறந்த நாளை தவெக நிர்வாகிகள் 365 நாளும் கொண்டாடுவார்கள். ஜூன் 22 அன்று பல்வேறு நலத்திட்டங்களை செய்வோம்” என்று கூறியிருந்தார்.