

தேர்தலில் போட்டியிடவில்லை, பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து மாநில தலைவர் சொன்னபிறகு தெரிய வரும் என்று சரத்குமார் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார், தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் பாஜகவில் முக்கிய பொறுப்புவழங்கப்படவில்லை என்று ஆதங்கத்தில் உள்ளார். இதனால் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக மார்ச் 22 அன்று தனது ஆதரவாளர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
பாஜக வேட்பாளர் தேர்வு ஆலோசனை
இதற்கிடையில் நேற்று அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஜகவில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் தன் சார்பில் பட்டியல் ஒன்றை அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
தேர்தலில் போட்டியிடவில்லை
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“களத்தில் சென்று மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேர்க்க வேண்டும் என்பதே எனக்கு இட்டிருக்கும் பணி. நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இத்துடன் 24 முறை அதைப் பற்றி தெரிவித்துவிட்டேன். கட்சி ரீதியாக அவர்களிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியிருந்தால் அது அவரது விருப்பத்தைத் தெரிவிக்கிறார் என்றுதான் அர்த்தம். போட்டியிடவில்லை என்பதால் விலகி இருக்கிறோம் என்று கிடையாது. என்னைப் பொறுத்தவரை மாநில தலைவரை மீறி எதையும் பேசுவதற்கு எனக்கு உரிமை கிடையாது. நான் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் அல்ல. கட்சியின் சேவகன் மட்டுமே. நான் கட்சியில் சேரும்போது சொன்ன கருத்துகளை மீண்டும் வலியுறுத்தி, என்னுடன் சேர்ந்து கட்சியில் இணைந்தவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதனால் நான் கொடுத்த பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இடங்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன். மாநிலத் தலைவர் சொன்ன பிறகு நான் பிரசாரத்திற்கு செல்வது குறித்த தகவல்கள் தெரியவரும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் உறுதி ஆனதற்குப் பிறகு அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.
Sarathkumar said that he will not contest the election and will be involved in the campaign after the state president tells him.