
தெலுங்கு மக்கள் குறித்து இழிவாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி ஹைதராபாதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் பிராமணர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி நவம்பர் 3 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பங்கேற்றுப் பேசினார். இவரது குறிப்பிட்ட பேச்சு தெலுங்கர்கள் குறித்து மரியாதைக் குறைவாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. பல்வேறு தரப்பினர் கஸ்தூரியின் பேச்சுக்குக் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள்.
இதைத் தொடர்ந்து, நவம்பர் 4 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தெலுங்கு மக்களை இழிவாகப் பேசியதாக 100 சதவீதம் பொய்ப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துள்ளார்கள்" என விளக்கம் கொடுத்தார். பிறகு, நவம்பர் 5 அன்று மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, கஸ்தூரி பேசியது தொடர்பாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு மத்தியில் கஸ்தூரி தலைமறைவானதாகத் தகவல்கள் வெளியாகின. கஸ்தூரியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டன.
கஸ்தூரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரியின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
தனிப்படை காவல் துறையினருக்கு கஸ்தூரி ஹைதராபாதில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் ஹைதராபாத் சென்ற தனிப்படை காவல் துறையினர், கஸ்தூரியைக் கைது செய்தார்கள். தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் இருந்தபோது, கஸ்தூரி கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அழைத்துவரப்படவுள்ள கஸ்தூரி நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.