பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்...: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

அனைத்து செயலிகளையும் கண்காணிப்பது நடைமுறை ரீதியாக அரசுக்கு சிரமம்.
பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்...: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு 14,016 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அக்டோபர் 28 முதல் அக்டோபர் 30 வரை சென்னையிலிருந்து மட்டும் பிற பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன் 4,900 சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 21 அன்று அறிவித்தார்.

இதுதவிர தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாகப் புகார்கள் எழுவது வழக்கம். அரசு சார்பிலும் இதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நிகழாண்டில் அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கமளித்தார்.

"பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்தக் கட்டணம் பயணிகளுக்குத் திருப்பி கொடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தனிச்சையாக அரசு அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்வார்கள். செயலிகளைப் பொறுத்தவரை, அனைத்து செயலிகளையும் கண்காணிப்பது நடைமுறை ரீதியாக அரசுக்கு சிரமம். புதிய செயலியைத் தொடங்கி, அதில் டிக்கெட் விற்பனையைச் செய்து வருகிறார்கள். எனவே, இதைக் கண்காணிப்பது சிரமம். அதே வேளையில் எங்களுக்குத் தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அமைச்சர் சிவசங்கர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in